ஒரு மனிதன் தேவனை ஏமாற்றக்கூடுமோ?
சோன்ஜா எச். வின்பர்ன் - அட்லாண்டா, ஜிஏ
அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்த ஜனங்களை வழிநடத்த, மல்கியா தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட கருவிகளில் ஒருவராக இருந்தார். எருசலேமைச் சுற்றியிருந்த மதில் மீண்டும் கட்டப்பட்ட பிறகு, மல்கியா அந்தத் தீர்க்கதரிசன நூலை எழுதியிருக்கலாம். நெகேமியா ஆளுநராக இருந்து முன்னேற்றம் ஏற்பட்டிருந்தபோதிலும், அவருடைய நற்செயல்களைத் தொடர்ந்து ஏற்பட்ட புதுப்பித்தல் பெருமளவில் குறைந்துவிட்டது. நகரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் மக்கள் எவ்வளவு சிரமப்பட்டார்களோ, அதே அளவு தங்கள் இருதயங்களை மீண்டும் கட்டியெழுப்புவதிலும் சிரமப்பட்டனர்!
இஸ்ரவேல் தேசம் எகிப்தை விட்டு வெளியேறிய பிறகு, ஆபிரகாமின் வம்சத்தின் வழியாக கிறிஸ்துவைக் கொண்டுவருவதற்காக, தேவன் அவர்களை மற்ற எல்லா தேசங்களிலிருந்தும் பிரித்தெடுத்தார் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுகிறார். ஏசாவை விட அவனுடைய சகோதரனாகிய யாக்கோபைத் தேர்ந்தெடுத்தது, தாங்கள் அற்புதமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நேசிக்கப்பட்டவர்கள் என்பதை இந்த மக்கள் உணர்ந்துகொள்ள உதவியிருக்க வேண்டும். கிறிஸ்துவை உலகிற்குள் கொண்டுவரத் தாம் திட்டமிட்டிருந்த வாயிலாக இஸ்ரவேல் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார்.
ஆனால் அவர்கள் தேவனுடைய நோக்கத்தை வித்தியாசமாகக் கருதி, தங்களை மற்ற தேசங்களை விட உயர்த்திக்கொள்ள முற்பட்டனர். தேவன் யாக்கோபின் சந்ததிக்கு தேவையானவற்றை அளிக்கிறார். அவர் ஒரு ஒரு தகப்பன் தன் பிள்ளைகளுக்கு போதிக்கிறது போல அவர்களுக்குப் போதித்து, அவர்களை ஒழுங்குபடுத்துகிறார். ஆனால் வரலாற்றின் இந்தக் காலகட்டத்தில், இஸ்ரவேல் அவருடைய அன்பின் வெளிப்பாட்டை மீண்டும் மீண்டும் புறக்கணித்தது. அவர் அவர்களை எகிப்திலிருந்து வழிநடத்திச் சென்றார்; பரிசுத்தமாக இருப்பது எப்படி என்பதை அவர்கள் புரிந்துகொள்ள உதவும் வகையில் அவர்களுக்கு நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார்; அவர்கள் தங்கள் எதிரிகளுடன் போரிட்டபோது அவர்களுடன் இருந்தார்; மேலும், அவருடைய அன்பையும் ஆசீர்வாதங்களையும் அவர்கள் உணர்ந்துகொள்ள உதவும் வகையில் அவர்களைச் சிறையிருப்புக்குக்கூட அனுப்பினார்.
இருப்பினும், மல்கியாவில் கூறியபடி, திரும்பி வந்த சந்ததி கடவுளுடனான தங்கள் தொடர்பில் முற்றிலும் விரோதமாக மாறியுள்ளது. முற்காலத்தில், அவர்கள் தண்டிக்கப்படும்போது, பொதுவாக மனந்திரும்பி, விடுதலைக்காக நன்றியுடன் திரும்புவார்கள்; ஆனால் இப்பொழுதோ, கடவுள் செய்தவற்றுக்கு அவர்கள் எந்த மரியாதையையும் பாராட்டையும் காட்டுவதில்லை. அவர்கள் தீட்டுப்பட்டதும் புறக்கணிக்கப்பட்டதுமான மிருகங்களைத் தங்கள் பலிகளுக்காகச் செலுத்துகிறார்கள், ஆசாரியர்களும் அவற்றை ஏற்றுக்கொள்கிறார்கள். மாறாக, அவர்கள் தங்களை விசுவாசமுள்ளவர்களாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறார்கள், எனவே அவர்கள் இன்னும் இந்த அங்கீகரிக்கப்படாத பலிகளை ஆலயத்தில் செலுத்துகிறார்கள்.
இந்த ஜனங்கள் தேவனுக்கு முதலிடம் கொடுப்பதில்லை. அவர்களுடைய பலிகளையும், செயல்களையும் தேவன் ஏற்றுக்கொள்வதில்லை, தேவன் கேட்டதையும் விரும்பியதையும் அல்லாமல், குருடர்களையும், நோயாளிகளையும், முடவர்களையும் அவர்கள் தேவனுக்குப் பலிகளாகச் செலுத்துகிறார்கள்.
அவர்கள் இனி கர்த்தரை சர்வவல்லமையுள்ள தேவனாக மதிப்பதில்லை. தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள முடியும் என்று உறுதியாக நம்பி, தேவனுடைய திறமைகளை விடத் தங்கள் திறமைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவருடைய வழிகாட்டுதலுக்குச் செவிகொடுப்பதை அவர்கள் நிறுத்திவிட்டார்கள்.
முன்பு செய்த பாவங்களை அவர்கள் எண்ணாமல் தேவனுக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள். ஒரு தேசமாக அவர்களின் வீழ்ச்சி, அவர்களின் மனப்பான்மையில் வெளிப்படுகிறது; இந்த மனப்பான்மையுடன், ஒரு தேசமாகவாவது மீண்டு வருவதற்கு அவர்களுக்கு இப்போது சிறிதும் நம்பிக்கை இல்லை. தனிப்பட்ட நபர்கள் திரும்புவார்கள், ஆனால் தேசம் ஒருபோதும் முன்பிருந்ததைப் போல இருக்காது.
எலியா வந்து மக்களின் இருதயங்களைத் தேவனிடம் திருப்புவார் என்று தேவன் குறிப்பிடுகிறார். நிச்சயமாக, இவர்தான் 400 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துவுக்கு முன்னோடியாக வரும் யோவான் ஸ்நானகர். அவர் இயேசுவைத் தேவ ஆட்டுக்குட்டியாக உலகிற்கு அறிமுகப்படுத்துவார்.
இந்த உரையாடல்கள் அனைத்திலும், ஒரு குற்றச்சாட்டு ஒரு கேள்வியின் வடிவில் உள்ளது. ஒரு மனிதன் தேவனை ஏமாற்றக்கூடுமோ?தேவனுடைய இரக்கத்தையும் அன்பையும் அவர்கள் எண்ணாமல் தேவனை ஏமாற்றினார்கள். அதற்கு மாறாக, அந்த ஜனங்கள் நாங்கள் எந்த விதத்தில் கர்த்தரை ஏமாற்றினோம் என்றார்கள்? அவர்கள் தங்கள் மோசமான மனப்பான்மைக்கோ அல்லது முறையற்ற செயல்களுக்கோ பொறுப்பேற்பதில்லை; மாறாக, அடம்பிடிக்கும் ஒரு குழந்தையைப் போலவே நடந்துகொள்கிறார்கள்.
அவர்கள் கீழ்ப்படியாமல் இருந்தபோதிலும், தாம் உண்மையுள்ளவராகவே இருப்பார் என்பதை தேவன் அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறார். மனந்திரும்புகிற அனைவருக்கும் இரட்சிப்பைக் கொண்டுவருவதாக அவர் தமது வாக்குறுதியை நிறைவேற்றுவார். மேலும், மேசியா அவர்கள் மூலமாகவே வருவார். இந்த நேரத்தில் இஸ்ரவேல் தேசத்தில் ஒரு சிலர் மட்டுமே செவிசாய்க்க வாய்ப்பிருந்தாலும், தாம் உண்மையுள்ளவர் என்பதாலும், தமது திட்டம் இன்னும் நடைமுறையில் இருப்பதாலும், இப்பொழுதும் இனி வரவிருக்கும் எல்லா தேசங்களுக்கும் நம்பிக்கை இருக்கும் என்பதை அவர் விளக்குகிறார். இறுதியில் அவர்களால் அவரைக் ஏமாற்ற முடியாது. இந்தப் பிற்கால சந்ததியினர் தேவனை மகிமைப்படுத்துவார்கள்.
வானம் மற்றும் பூமியின் அனைத்து சேனைகளுக்கும் ஆண்டவராகவும், சேனைகளின் ஆண்டவராகவும் தேவன் மல்கியா மூலமாகப் பேசுகிறார். அவர்களுடைய கோபமான மனப்பான்மைகள் எப்படி இருந்தாலும், எல்லா தேசங்களும் கர்த்தரின் நாமத்தை மகிமைப்படுத்திப் போற்றும் என்று அவர் அவர்களிடம் கூறுகிறார். அவர்களுடைய அக்கிரமம், தேவன் செய்த எந்த வாக்குறுதியையும் முறியடிக்காது. அவருடைய எந்த நோக்கமும் தோல்வியடையாது.
ஆகவே, இப்போது நாம் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், இந்த மக்கள் செய்த குற்றத்தைப் போலவே நாமும் தேவனை வஞ்சிக்க முயற்சிக்கிறோமா? நம்முடைய செயல்களில் நாம் விரோதமாக இருக்கமுடியுமா?. தேவன் நமக்கு செய்த ஆசீர்வாதங்களை நாம் மறைக்க இயலுமோ? நாம் பெற்றுக்கொள்ளாத ஆசிர்வாதத்திற்கு தேவனை குறைசொல்ல முடியுமா? ஆகவே மனந்திரும்பி தேவனுக்கேற்ற பிள்ளைகளாய் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். நாம் மனந்திரும்பும் பட்சத்தில் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் என்றென்றும் ஆசீர்வாதமாய் நமக்கு அமையும்.