கர்த்தாவே எங்களை நினைத்தருளும் 

மனிதகுலம் நினைவுகூர முயற்சிப்பதில் கணிசமான நேரத்தைச் செலவிடுகிறது. நாம் மிகவும் மறதி உடையவர்கள், அதனால் நினைவுகூர உதவும் வகையில் சில  வழக்கங்களை உருவாக்கிக் கொள்கிறோம். நாடுகள் நினைவிடங்களால் நிரம்பியுள்ளன, மேலும் ஏறக்குறைய எல்லாப் பள்ளிகளிலும் வரலாறு கற்பிக்கப்படுகிறது. இவை இரண்டுமே நிகழ்வுகள் அல்லது நபர்களைப் பற்றிய நினைவைத் தூண்டும் நோக்கத்தைக் கொண்டுள்ளன. உண்மையில், ஆங்கிலேய காமன்வெல்த் நாடுகளில், முதலாம் உலகப் போரின் முடிவையும் போரில் வீழ்ந்த வீரர்களையும் நினைவுகூரும் நோக்கில் 'நினைவு நாள்' என்ற ஒரு முழு நாள் உள்ளது. அரசியல்வாதிகள், பிரபலங்கள், ஏன் செல்வாக்கு மிக்கவர்கள் கூட இப்போதும் எதிர்காலத்திலும் நினைவுகூரப்பட வேண்டும் என்று ஆர்ப்பரிக்கிறார்கள் - அவர்கள் ஒரு உலக நினைவை விரும்புகிறார்கள். இருப்பினும், நெகேமியா தொடர்ந்து கேட்பது, தேவன் தன்னை நினைவுகூர வேண்டும் என்பதுதான்.

 பாரசீக ராஜாவாகிய அர்த்தசாஷ்டாவுக்கு நெகேமியா பானபாத்திரக்காரராக இருந்தார். இது ஒரு மதிப்புமிக்க மற்றும் நம்பகமான பதவியாக இருந்ததால், நெகேமியாவுக்கு ஒரு முக்கிய இடமும் ஒரு குறிப்பிட்ட மதிப்பும் கிடைத்தது. பெரும்பாலான மக்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ராஜாவை அணுகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அதுமட்டுமின்றி, அக்காலத்தில் அதுவே உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராஜ்ஜியமாக இருந்தது. ராஜாவிடம் உள்ள வேலையை சிறிது காலம் துறந்து, நெகேமியா தேவனுடைய வேலையை செய்ய முடிவெடுக்கிறார்.  இது அவரைப் பற்றி ஒரு விஷயத்தை நமக்கு உணர்த்துகிறது. எரேமியா போன்ற தீர்க்கதரிசிகள் மூலம் தேவன் அளித்த வாக்குறுதிகளை நெகேமியா உறுதியாகப் பற்றிக்கொண்டு, அவருடைய தேசத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் தானும் ஒரு அங்கமாக இருக்க விரும்புகிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது. அந்த அளவிற்கு, அவர் மதிப்புமிக்க மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பதவியைத் துறக்கிறார்.

அவர் எருசலேமுக்கு வந்தவுடன், தனது தலைமைத்துவத் திறன்களை வெளிப்படுத்தி, எதிர்ப்புகளையும் விரக்தியூட்டும் சூழ்நிலைகளையும் மீறி, வெறும் 52 நாட்களில் மதில் சுவரைக் கட்டி முடிக்கிறார். மேலும், தேசத்தை மீண்டும் தேவனுடைய சித்தத்திற்கு இசைவாகக் கொண்டுவர எஸ்றாவுடன் இணைந்து பணியாற்றுகிறார். இந்த நேரத்தில், தனது நன்மைகளுக்காக தன்னை நினைவுகூரும்படி அவர் தேவனிடம் ஜெபிக்கிறார். நன்மை செய்வதற்கும், அவருடைய திட்டத்தில் ஒரு அங்கமாக இருப்பதற்கும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ததை நினைவுகூரும்படி அவர் தேவனிடம் கேட்கிறார். நெகேமியா தேவனுடைய வல்லமையைப் புரிந்துகொண்டு அறிந்திருந்தார் என்றும், அவருடைய நினைவு மிகவும் போற்றத்தக்கது என்றும் நான் நம்புகிறேன்.

நம்முடையதைப் போலன்றி, நெகேமியாவும் தனது தோல்விகள் மற்றும் குறைகள் இருந்தபோதிலும், தேவன் தன்னை அனுகூலமாகக் கருத வேண்டும் என்று கேட்கும் அளவுக்கு தேவனுடன் போதுமான அளவு சௌகரியமாக உணர்கிறார் என்பதை இந்த ஜெபம் எனக்கு உணர்த்துகிறது. உண்மையில், இந்தப் புத்தகம் முழுவதும் நான்கு முறை தனது செயல்களை நினைவுகூரும்படி அவர் தேவனிடம் இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறார். தலைமைப் பண்புகள், பொதுவான தொலைநோக்குப்பார்வை , விசுவாசத்தோடு செயல்படுதல் மற்றும் இன்னும் பல அற்புதமான பண்புகள் நெகேமியாவிடம் நிறைந்துள்ளன. இருப்பினும், நெகேமியாவிடமிருந்து நான் கவனம் செலுத்த விரும்பும் பாடம், சரியான முன்னுரிமையாகும். உலகப் பார்வையில் நெகேமியா ஒரு வெற்றிகரமான மனிதர் என்பது தெளிவாகிறது - ஆனால், தன் வாழ்வில் தேவனைச் சரியான இடத்தில் - அதாவது முதலிடத்தில்  வைக்க அவர் பாடுபட்டிருக்கிறார் என்பதும் தெளிவாகிறது. இது, அவருடைய தொழில், கௌரவம், ஏன் மற்றவர்களின் அன்பு ஆகியவற்றைக்கூட அவற்றின் சரியான இடங்களில் வைக்க அவருக்கு உதவியது. தேவனை முதலில் தேர்ந்தெடுப்பதன் வல்லமையை நெகேமியா புரிந்துகொள்கிறார். புத்தகத்தின் தொடக்கத்திலிருந்தே, எருசலேமும் யூதாவும் எப்படி இருக்கின்றன என்று நெகேமியா தன் நாட்டு மக்களில் ஒருவரிடம் கேட்பதை நாம் காண்கிறோம். அவர் தன் வேலை, தேவைகள் மற்றும் தற்போதைய இருப்பிடம் ஆகியவற்றில் மட்டும் அக்கறை கொள்ளவில்லை. அதே காரியங்களில் அக்கறை கொள்ள அவர் உழைக்கிறார். தேவன் விரும்பும் விஷயம் அது. காரியங்கள் சரியாக நடக்கவில்லை என்று கேள்விப்பட்டவுடன், அது அவரைக் கலக்கமடையச் செய்கிறது. அது அவரை மிகவும் பாதித்ததால், அவர் அழுது, ஜெபித்து, உபவாசம் இருந்தார். அது அவரை மிகவும் பாதித்ததால், நான்கு மாதங்கள் கழிந்த பிறகும் அது அவர் மனதில் இருந்தது, மேலும் நெகேமியாவின் முகம் சரியில்லை என்பதை ராஜாவால் உணர முடிந்தது! ராஜா  நெகேமியாவிடம் அதைப் பற்றிக் கேட்டபோது, ​​நெகேமியா  தேவனைப் பற்றிய துக்கத்தை நேர்மையாகக் கூறி, ராஜாவிடம் ஒரு கோரிக்கையை வைப்பதற்கு முன்பு ஜெபிக்க நினைத்தார். பின்னர், தனது ஜெபத்திற்குப் பதில் கிடைத்ததை உணர்ந்து, நீண்ட விடுப்பு கேட்கும் தைரியம் அவருக்கு வந்தது. அவருக்கு அந்த விடுப்பு கிடைத்தது மட்டுமல்லாமல், வளங்களும் படைவீரர்களின் பாதுகாப்பும் கிடைத்தன.

நெகேமியா எருசலேமுக்கு வந்தடைந்ததும், செய்ய வேண்டிய பணிகளை ஆராய்ந்து, உடனடியாக ஒரு திட்டத்தை வகுக்கிறார். எதிரிகளிடமிருந்து எதிர்ப்பு தொடங்குகிறது, மேலும் மற்றவர்களைச் சுரண்டிக்கொள்ளும் தன் நாட்டு மக்களிடமிருந்தும் அவர் உள் போராட்டங்களை எதிர்கொள்கிறார். இந்தப் போராட்டங்கள் இருந்தபோதிலும், நெகேமியா இந்த இஸ்ரவேலர்களை ஒன்றுதிரட்டி, இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் அந்தச் சுவரைக் கட்டி முடிக்கிறார்.

பல்வேறு காரணங்களுக்காக, கடந்த சில மாதங்களாக, நான் விக்கிரக ஆராதனை  என்ற தலைப்பைப் பற்றி கணிசமான நேரத்தைச் சிந்தித்து வருகிறேன். இந்த ஆய்வுக்குத் தயாராகும்போது, ​​விக்கிரக ஆராதனையை எப்படி வேரோடு பிடுங்கி எறிவது என்பதற்கு நெகேமியா ஒரு அற்புதமான உதாரணம் என்பதை நான் உணர்ந்தேன். நெகேமியாவைப் போலவே, நானும் என் வாழ்வில் தேவனுக்கு மிக உயர்ந்த இடத்தைக் கொடுக்க வேண்டும், பின்னர் என் மற்ற எல்லா முன்னுரிமைகளையும் தேவன் விரும்பும் விதத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும். தேவன் அக்கறை காட்டும் காரியங்களில் நானும் அக்கறை காட்ட வேண்டும், மேலும் அவரிடம் பேசுவதை என் இயல்பான பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் குறைவாகக் கவலைப்பட வேண்டும், மேலும் தேவன் என்னைப் பற்றி என்ன நினைப்பார் என்பதில் நான் அதிகமாகக் கவலைப்பட வேண்டும். என் இருதயத்தின் விக்கிரகங்களை நொறுக்குவதற்கும், கர்த்தருடைய ராஜ்யத்தில் செய்யப்பட வேண்டிய வேலையை முடிப்பதற்கு மட்டுமல்லாமல், உள்ளேயும் வெளியேயும் உள்ள எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்கான ஞானத்தையும் திறமையையும் எனக்குத் தருவதற்கும் தேவையான படிகள் இவைதான்.


நெகேமியா, நம்மைப்போலவே, கர்த்தருடையசித்தத்திற்குத்தன்னைஒப்புக்கொடுத்து, தனக்குக்கொடுக்கப்பட்டவாய்ப்புகளைபயன்படுத்திஅற்புதமானகாரியங்களைச்சாதித்தஒருமனிதருக்குஓர்அழகானஎடுத்துக்காட்டு. நானும்என்முன்னுரிமைகளைச்சரியாகவகுத்துக்கொண்டு, தேவன்எனக்குக்கொடுத்தவாய்ப்புகளைஎன்சிறியஉலகத்தின்சுவர்களைச்சீரமைக்கப்பயன்படுத்தவும், மேலும்கர்த்தர்என்னைநினைவுகூரும்படிநானும்தாழ்மையுடன்கேட்கவும்ஜெபிக்கிறேன்.

Previous
Previous

ஒரு மனிதன்  தேவனை ஏமாற்றக்கூடுமோ?

Next
Next

அக்கிரமத்தை ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும்?